மூலிகை மருந்துகள் கொண்ட மகப்பேறு சஞ்சீவி திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


தாய்மை அடைந்த பெண்களுக்கு மூலிகை மருந்துகள் கொண்ட மகப்பேறு சஞ்சீவி திட்டம் உள்ளிட்ட மருத்துவத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கப்பட்ட இந்த திட்டங்களில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் 15 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி விழா விருந்தினர் இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.

சேலம், கோவை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் வசதிகளையும் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை, விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனைகளிலும் கூடுதல் வசதிகள் என மருத்துவத் துறையில் மொத்தம் 57 கோடியே 32 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு ஏற்ப, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தாய்மை அடைந்த பெண்களுக்கு 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி என்ற திட்டத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS