அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு களத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரம்


வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதனை சிறப்பாக நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள், காளைகள் வளர்ப்போர் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேட்டில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுப் பகுதியை சுத்தம் செய்யும் பணியை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது.
இதனால் மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். கொங்குமண்டலத்தில், காங்கேயம் காளைகளை கொண்டு ரேக்ளா பந்தயத்தை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளும் களைகட்டியுள்ளன. காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்வு தரும் வகையில் பல்வேறு பயிற்சிகளும், சத்தான உணவுகளும் அளிக்கப்படுகின்றன.

கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களில் ரேக்ளா போட்டிகளை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு, அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததால், திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் காளைமாடு விடும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானி ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த குதிரைகள் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் குதிரை வண்டிப் பந்தயங்களில் கலந்து கொள்கின்றன.

இதற்காக குதிரைகளுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து, போட்டிக்கு உற்சாகமாக தயார்படுத்தி வருகின்றனர் குதிரை வளர்ப்போர். இதுபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா, குதிரை வண்டி பந்தயம் போன்றவற்றை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS