தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, அந்த வீர விளையாட்டை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க பிரதமரை வலியுறுத்தியதாகவும், இப்போது அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அங்கம் வகித்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், காட்சி விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்ததாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது, ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்ற தடை செய்து ஆணையிட காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், காளைகள் தொடர்ந்து காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்தாலும், உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 5 உரிமைகளும், பிராணிகள் வதைச் சட்டக் கூறுகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிக்கை காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடையேதுமில்லை என்று கூறியுள்ள ஜெயலலிதா, எதிர்வரும் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS