பொங்கலையொட்டி 12,624 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு


பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 624 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்வதற்காக வரும் 9-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை 4,682 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மாநிலத்தின் மற்ற முக்கிய ஊர்களில், வரும் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 7,942 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் மக்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்காக இதே அளவிலான சிறப்புப் பேருந்துகள் வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயக்கப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நாட்களில் சென்னை மாநகரில், 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ள முதலமைச்சர், வரும் 17-ம் தேதி காணும் பொங்கல் நாளில் மெரினா கடற்கரை, மகாபலிபுரம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுகுறித்து, 044-24794709 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS