மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுகளை இன்னும் எண்ணி முடிக்கவில்லை: ரிசர்வ் வங்கி


கறுப்புப் பண மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயர்மதிப்பு கொண்ட தனது ரூபாய் நோட்டுகளை 2016 நவம்பரில் இந்தியா மதிப்பிழக்கச் செய்தது. அப்போது, திரும்பிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்னும் முழுமையாக எண்ணப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

பிடிஐ செய்தியாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் இந்திய ரிசர்வ் வங்கி இதைத் தெரிவித்துள்ளது. அப்போது, கடந்த 15 மாதங்களாக ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்வதாகவும், எப்போது முடியும் என சொல்ல முடியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த எண்ணிக்கைக்காக 59 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது. இவை திரும்பி வந்த ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகளை அடையாளம் காட்டும் வல்லமை பெற்றவை எனவும் கூறப்பட்டுள்ளது.  

மறுபுறம், கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்படி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாள்கள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அமலான அன்று புழக்கத்தில் இருந்ததில் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என கூறப்படுகிறது. அதாவது, 500 ரூபாய் தாள்களில் 1,716 கோடியும், 1000 ரூபாய் நோட்டுகளில் 68,580 கோடியும், ஆக மொத்தம் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் திரும்பிவிட்டதாகவும், வெறும் 16,050 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மட்டுமே கஜானாவுக்குத் திரும்பாமல் மக்களிடம் தங்கிவிட்டதாகவும் தெரிகிறது. அதை உறுதிசெய்துக் கொண்டபின் பழைய மதிப்பிழந்த எல்லா நோட்டுகளும் அழிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS