பயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டதால் அதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு வந்த நிலையில் பட்ஜெட்டுக்குப் பின் அவை சரிவுப் பாதைக்கு மாறியுள்ளன. பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, பங்குச் சந்தையில் பாதிப்பு தெரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும் பின்னர் சீரடைந்தது. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடன் சரிவடைந்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டது. இறுதியில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து, 35,906 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோலவே, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 11,016 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

இந்நிலையில், இன்று பங்கு வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 573 புள்ளிகள் வரை குறைந்தது. நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்தது. பங்குகளை விற்று கிடைக்கும் தொகைக்கு நீண்ட கால ஆதாய வரி விதித்ததால் சந்தைகளில் சரிவு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பட்ஜெட்டில் ஏமாற்றம் மிஞ்சியதை அடுத்து இம்மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பை எதிர்பார்த்து சந்தை காத்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். சற்று முன் சென்செக்ஸ் 469 புள்ளிகள் சரிவுடன் இருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS