கேட்டது ஐபோன் 8, கிடைத்தது சோப்பு: ஷாக் கொடுத்த பிளிப்கார்ட்!


ஆன்லைனில் பணம் கட்டி, ‘ஐபோன் 8’ ஆர்டர் செய்தவருக்கு தம்மாத்துண்டு சோப்பை அனுப்பி வைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறது பிளிப்கார்ட்!

நவி மும்பை அருகேயுள்ள பன்வலைச் சேர்ந்தவர் தேம்ராஜ் மெகபூர் நாக்ராலி (26). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு லேட்டஸ்ட் மாடலான ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆசை. ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்தார். உடனடியாக தனது கார்டில் அந்த போனுக்கான ரூ.55 ஆயிரத்தைச் செலுத்தினார்.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு பிளிப்கார்டில் இருந்து வீட்டுக்கு வந்தது, ஒரு பார்சல். ஆசையாக பிரித்துப் பார்த்த நாகரலிக்கு அதிர்ச்சி. ஏனென்றால் உள்ளே இருந்தது, ’ஐபோன் 8’ அல்ல. ’ஆக்டிவ் வீல்’ என்ற சோப்பு. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த நாகரலி, பிளிப்கார்ட் மீது பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பிளிப்கார்ட் நிறுவனத்திடம் கேட்டபோது, ’இதுபற்றி நாங்களும் விசாரித்துவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS