வங்கிகளை மூடும் திட்டமில்லை: சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு


சில வங்கிகள் மூடப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் வெளியான தகவல் வெறும் வதந்தியே என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிசிஏ எனப்படும் சீர்திருத்த நடவடிக்கைப் பிரிவில் சில வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த வங்கிகள் மூடப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் நிதி நிலைமையை சரியாக பராமரிக்கும் நோக்கில், சில வங்கிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதே சீர்திருத்த நடவடிக்கை என்றும், இதன் மூலம் அந்த வங்கிகளின் அன்றாட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்த நடைமுறை கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே வழக்கத்தில் இருப்பதாகவும், எனவே, சில வங்கிகள் மூடப்பட இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என்றும், மத்திய நிதி அமைச்சகமும் மறுத்துள்ளது. அதேபோல் கண்காணிப்பு காரணமாக வங்கிகளின் அன்றாட வாடிக்கையாளர் சேவை பாதிக்காது என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS