மக்களை அச்சுறுத்திய முட்டை விலை குறைந்தது


முட்டை விலை 10 நாட்களில் 91 காசுகள் குறைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மாத தொடக்கத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. மிக அதிகப்பட்சமாக கடந்த 16-ஆம் தேதி ஒரு முட்டை விலை 5 ரூபாய் 16 காசுகளாக உயர்ந்திருந்தது. முட்டை விலை உயர்வால் ஆம்லெட், முட்டையால் செய்யப்படும் கேக் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. தொடர் முட்டை விலை உயர்வால், முட்டைகளை வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டினர். இதனால் முட்டை விலை வெகுவாக குறையத் தொடங்கியது. கடந்த 21-ஆம் தேதி ஒரு முட்டை விலை 11 காசுகள் குறைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து 23,24-ஆகிய தேதிகளில் தலா 20 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களில் மொத்தமாக ஒரு முட்டை விலை 91 காசுகள் அளவுக்கு விலை குறைந்துள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்பன் பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழகம், கேரளாவில் முட்டை விற்பனை சரிந்து தேக்கம் ஏற்பட்டதோடு, வடமாநிலங்களிலும் முட்டை விற்பனை சரிந்துள்ளது. இதனால் முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விலை மேலும் சற்று குறைந்து அதன் பின்னர் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS