டிச. 27-ல் வங்கிகள் வேலைநிறுத்தம்


டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை திருத்தம் செய்யக் கோரி அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இரு சங்கங்களின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ஐடிபிஐ வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து, கடந்த 1.11.2012 இல் இருந்து ஐடிபிஐ நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் வங்கியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்து 25 சதவீதமாக இருக்கிறது. அதேபோல வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்கான ஒதுக்கீடு செய்த தொகையும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. 

POST COMMENTS VIEW COMMENTS