வங்கியில் பெற்ற பணத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு 


சேலத்தில் வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஓமலூரைச் சேர்ந்தவர் சித்துராஜ். இவர், சொந்தமாக பட்டு கைத்தறி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் சம்பந்தமாக செம்மாண்டப்பட்டியில் கார்பரேசன் வங்கியில் நடப்பு கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார். இவரிடம் பட்டு புடவை வாங்கும் வியாபாரிகள் சித்துராஜின் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிவிட்டு புடவைகளை பார்சலில் எடுத்துகொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த இரண்டு நாட்களுக்கு அனுப்பிய பட்டு புடவைகளுக்கு வியாபாரிகள் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சித்துராஜ், தனது கணக்கில் உள்ள பணத்தில் 60 ஆயிரம் ரூபாயை காசோலை கொடுத்து பணமாக வாங்கியுள்ளார். வங்கியில் அவருக்கு 30 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி பணியாளர்கள் கொடுத்துள்ளனர். அப்போது பணத்தை எண்ணிப்பார்த்த அவர், அதில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மட்டும் கள்ளநோட்டாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

பின்பு அவர் ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக வந்ததை பற்றி வங்கி மேலாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் அந்த இரண்டாயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். அரசு உடமையாக்கப்பட்ட வங்கியிலேயே கள்ள நோட்டுகள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   


 

POST COMMENTS VIEW COMMENTS