ஆர்கே நகர் இடைத்தேர்தல்: துரிதமாக செயல்படும் தேர்தல் ஆணையம்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட கையோடு தேர்தல் ஆணையம் தரப்பில் முழுவீச்சில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ஆர்கே நகர் இடைத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக வேலுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதிதிராவிடர்‌ நலத்துறை இணை இயக்குநராக உள்ளார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக வட்டாட்சியர்கள் முருகேசன் மற்றும் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரி விஜயகுமார் வாக்காளர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்கே நகர் இடைத் தேர்தலை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடத்தி முடிக்க ஏதுவாக 10 கம்பெனிக்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரை அழைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 28ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதலே வாகன சோதனை தொடங்கப்பட உள்ளதாகவும், பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் குறித்து 1913, 1950 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் தேர்தல் விதிமீறல்கள் இருந்தால் புகைப்படத்துடன் 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருள் வினியோகம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க வசதியாக தொகுதி மக்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன் தெரிவித்தார். 

முன்னதாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, சென்னையில் உள்ள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சி முறையில் நடந்த ஆலோசனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS