தமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


தமிழக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த உத்தரவிட கோரி திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் , அதன் முடிவை பொறுத்து இந்த மனுவை விசாரிக்கலாம் என கூறி நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படு‌த்தவும், வேட்பாளர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிடவேண்டும் என கோரி திமுகவின் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில்‌ மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் பணியில் தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களை மட்டும் ஈடுபடுத்தவேண்டும் என்றும், 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS