உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: இன்று பிற்பகல் விசாரணை


உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ‌தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19–ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் நேற்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேலும் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்கவும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS