மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் மொழி நீக்கம்: தேர்வர்கள் அதிர்ச்சி


சி.டி.இ.டி தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்து. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும்  அதிருப்தி எழுந்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை மொத்தமாக 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்த நிலையில் தற்போது அதில் இருந்து தமிழ் உள்பட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. தேர்வு ஹிந்தி, சான்ஸ்கிரிட், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதில் இரண்டு மொழிகளை தேர்வு செய்ய வேண்டும். இதனால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுதலாம் என நினைத்திருந்த தேர்வர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு இது மிகப் பெரிய பின்னடைவாகும். ஹிந்தி மொழி பேசுபவர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் தேர்வர்கள் போட்டி போடுவது என்பது கடினமானது என்கின்றனர். இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, தென்னக மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டாயமாக ஹிந்தி, சான்ஸ்கிரிட் மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சி.டி.இ.டி தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராக  பணியாற்ற விரும்பினால் தாள்-1-ல் பங்கேற்றால் போதுமானது. அதுபோல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புவர்கள் தாள் 2-ல் பங்கேற்றால் போதுமானது.

POST COMMENTS VIEW COMMENTS