“சூப்பர் 30” திட்டத்தால் நீட் தேர்வில் சாதித்த பெரம்பலூர் அரசுப்பள்ளி


பெரம்பலூரிலுள்ள அரசுப் பள்ளி “சூப்பர் 30” திட்டத்தின் மூலம் 20 மாணவர்களை நீட் தேர்வில் தேர்ச்சி அடையச்செய்துள்ளது.

“சூப்பர் 30” என்றால் என்ன? 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூரின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தரேஷ் அகமது. இவர் ஆட்சியராக இருந்த காலகட்டத்தில், ஏழை மாணவர்கள் மேல்படிப்பை தொடர உதவியாக இலவச பயிற்சி மையத்தை அரசுப் பள்ளியில் தொடங்கியுள்ளார். இந்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பல மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பலர் மருத்துவம், பொறியியல் உட்பட பல துறைகளில் தங்கள் படிப்படை தொடர்ந்து வருகின்றனர். இங்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்ற ஆலோசனைகள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவதன் மூலம் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சமும், குழப்பமும் நீங்கி தெளிவான சிந்தனையுடன் உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த சூப்பர் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நன்கு தகுதிபெற்ற அரசு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குகின்றனர். அத்துடன் விருப்பமுள்ள ஆசிரியர்களும் இதில் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு பயிற்சி எடுக்க வரும் மாணவர்களுக்கு, முதலில் தகுதித்தேர்வு வைக்கப்பட்ட அவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்றார் போல் பயிற்சி வகுப்புகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் இங்கு பயிற்சி பெறுவோர்களுக்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றது. 

இந்த ஆண்டு ‘சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் 46 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 20 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கிருக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுதவிர இங்கு படித்த பலரும், செவிலியர், கால்நடை துறை, வேளாண்மைத் துறை மற்றும் பொறியியல் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். இந்த வருடம் 20 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், நடப்பு ஆண்டில் ‘சூப்பர் 30’ திட்டத்தில் பயிற்சி பெற அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘சூப்பர் 30’ திட்டத்தின் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார். 

இந்தத் திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் கொண்டு வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 412 பயிற்சி மையங்களில் மொத்தம் 9,034 பேர் பயின்றனர். இதில் 1,300 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 195 பேரும், கன்னியாகுமரியில் 173 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலானோர் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சீட் பெற முடியாத வகையில் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். அரசுப் பயிற்சி மையங்கள் என்பது நீட் தேர்வுக்காக ஆரம்பிக்கப்பட்டிருப்பவை. ஆனால் ‘சூப்பர் 30’ என்பது அனைத்து வித மேற்படிப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவதாகவும், மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்குவதாலும், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது சிறந்தது என மாணவர்களும், பெற்றோர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

POST COMMENTS VIEW COMMENTS