ஆசிரியர்கள் இல்லாத அரசுப்பள்ளி: தேர்வுக்கு தயாராக முடியாமல் தவிக்கும் மாணவிகள்


மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இருக்கும் ஒரு மேல்நிலை பள்ளியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவ - மாணவிகள் தவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளிலும், அந்தியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர், சோளர், ஊராளி, மலையாளி உள்ளிட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பள்ளிகள் இல்லாமல் இருந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில், பர்கூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட பள்ளியில் 11 ஆம் வகுப்பிற்கும், 12 ஆம் வகுப்பிற்கும் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் பொதுதேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதேபோல பொதுத் தேர்வின்போது இதேபள்ளியில் தேர்வுமையம் அமைக்கப்படாமல், அந்தியூர் செல்ல வேண்டியிருப்பதால், அப்போதும் மிகுந்த சிக்கல் ஏற்படுவதாக மாணவிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதோடு அவர்களுக்கான குடியிருப்புகளையும் அங்கேயே அமைக்க வேண்டும் என்றும் பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS