மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு


கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த குற்றச்சாட்டை, மருத்துவத் தேர்வுத்துறை மறுத்துள்ளது. அதேபோல, இரு மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பித்தது தவறு என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.

நீட் அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வில்‌ வேறுமாநில மாணவர்கள் சிலர் போலி இருப்பிடச்சான்று கொடுத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 9 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களின் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. அப்போது இவர்கள் தமிழகத்தில் படித்த மாணவர்களே என்றும், பூர்வீகம் கேரளா என்றும் தெரியவந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவை போலி சான்றுகள் அல்ல என்றும் எனினும் புகாருக்கு உள்ளான மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேச மூர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கிடையே வெளிமாநில மாணவர்கள் 28 பேர் மட்டுமே மருத்துவப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும் மருத்துவ தேர்வுத்துறை தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS