மருத்துவக் கலந்தாய்வு - அ‌ரசு மருத்துவக்கல்லூரிகளில் 2644 இடங்கள் நிரம்பின


கடந்த 24ஆம் தேதியிலிருந்து நேற்றுவரை நடைபெற்ற நீட் அடிப்படையிலான மருத்துவ‌ர் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பாலான இடங்கள் நிரம்பின.

அ‌ரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மொத்தமுள்ள இடங்களான 2,650 ல், 2,644 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 இடங்கள் மட்டுமே மீதமுள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 72 இடங்களும் நிரம்பிவிட்டன. சுயநிதி கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களான 808ல், 777 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுயநிதி கல்லூரிகளில் 31 இடங்கள் காலியாக உள்ளன. அரசு பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 156 இடங்களில் 149 இடங்கள் நிரம்பிவிட்டன. சுயநிதி பல்மருத்துவக்கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 45 இ‌டங்களில் 716 இடங்கள் நிரம்பிவிட்டன. இந்நிலையில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 329 இடங்கள் காலியாக உள்ளன.

இதனிடையே, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இந்த கால நீட்டிப்பு நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்துமெனவும், வேறு கல்லூரிகளுக்குக் கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS