மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்


தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய 88 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில், சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் அவசரச் சட்டத்திற்கு இல்லை எனவும் அதனால் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. நீதிமன்றங்களால் அந்தச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவசரச் சட்டத்தால் நீட் தேர்வு எழுதிய பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. தரவரிசைப் பட்டியல் எங்கே? என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், எந்த மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வசையில் தீர்வு தேவை என்றும் கூறியது.

பின்னர் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை இது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி விளக்கமளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS