கெடுபிடி காட்டும் வனத்துறை - குறைந்து போன மீன்வளத்தால் ஏக்கத்தில் மீனவர்கள்


ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியை அடுத்த ஒப்பிலான்,  மாரியூர் கடலோரப்பகுதிகளில்  உள்ள மீனவர்களுக்கு அருகிலுள்ள தீவுகளுக்கு சென்று மீன்பிடிக்க அரசு அனுமதி மறுப்பதாக அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாயல்குடியை அடுத்த  ஒப்பிலான் அருகே கடலுக்குள்  நல்லதண்ணீர் தீவு, உப்புத்தண்ணீர் தீவு என, அருகருகே இரண்டு தீவுகள்  அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதிகளில்  நல்ல மீன் வளம் இருந்து வரும் நிலையில்,  அங்கு சென்று மீன்பிடிக்க அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இதனால் நாட்டுப்படகுகளைக் கொண்டு கரையோரங்களில் அண்மைக்கடல் மீன்பிடிக்கும் சிறுதொழில் மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காமல்,  வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

 இது குறித்து  ஒப்பிலான் பகுதி  மீனவர்கள் கூறும்போது,  “அண்மைக்கடல் மீன்பிடிப்பில்  விலை அதிகமுள்ள பெரிய மீன்கள் சிக்காது. முன்பு தீவுகளின் அருகே சென்று வலை விரித்து தொழில் செய்து வந்தோம். தற்போது தீவுகளை ஒட்டிய பகுதியில் விரித்தால், வனத்துறையினர் அதிகளவு நெருக்கடி கொடுத்து, விரட்டுகின்றனர். மன்னார் வளைகுடாப்பகுதி என கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்”.எனவே இங்குள்ள தீவுப்பகுதிகளுக்குச்சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

நாம் இது குறித்து மன்னார் வளைகுடா தேசிய வன உயிரின சரகர் சிக்கந்தர் பாட்ஷாவிடம் கேட்டபோது, அந்த இரண்டு தீவுகளைச்சுற்றிலும் அரிய வகை பாதுகாக்கப்படவேண்டிய  பவளப்பாறைகள் நிறைந்துள்ளதால் அங்கு மீன் வளம் அதிகம் உள்ளது என்பது உண்மைதான் என்றும் ஆனால், தீவுகளை  தேசிய பூங்காவாக அரசு அறிவித்துள்ளதால் அதனருகே செல்லக்கூட  யாருக்கும் அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்

தகவல் : லிங்கேஸ்வரன், செய்தியாளர். 

POST COMMENTS VIEW COMMENTS