சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!


சென்னை ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் மாநகரப் பேருந்து சிக்கிக் கொண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை கண்ணகி நகரில் இருந்து பிராட்வே வந்து கொண்டிருந்த 102K மாநகரப் பேருந்து ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் சென்றபோது தறி கெட்டு ஓடியுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுரங்கப்பாதை சுவற்றில் மோதி நடு ரோட்டில் நின்றுள்ளது. இந்தப் பேருந்தில் 35 பயணிகள் பயணித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக நடத்துநர் மற்றும் பயணிகளும் காயங்களின்றி தப்பித்துள்ளனர்.

பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுனர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் பணியில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு பேருந்துகள் அகற்றப்பட்டன. சுரங்கப்பாதையில் தற்போது பேருந்துகளும் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. பேருந்து விபத்தில் உயிர் சேதம் இன்றி பயணிகள் தப்பித்தாலும், பேருந்து ரோட்டில் வழியை மறித்து நின்றதால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலை பள்ளி, அலுவலங்ளுக்கு சென்ற மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

POST COMMENTS VIEW COMMENTS