கோவையில் ஏடிஎம்-க்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு


கோவையில் பணம் இல்லாத ஏடிஎம் ஒன்றுக்கு இறுதிச்சடங்கு செய்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பணம் இல்லாத ஏடிஎம் ஒன்றுக்கு இறுதிச்சடங்கு செய்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்கத்தின் உறுப்பினர் அமிர்தம், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் நாடெங்கும் உள்ள பல ஏடிஎம்-கள் வேலை செய்யாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி அதிகாரிகள் தங்களிடம் போதிய அளவு பணம் இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் பிரச்னையை விரைவில் தீர்க்க, அனைத்து ஏடிஎம்களிலும் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS