நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து


தூத்துக்குடியில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தொடர்பாக நேற்றிரவு வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்ற வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வர, எதிரே வேறு சில வழக்கறிஞர்களும் வந்துள்ளனர்.

அப்போது தேர்தல் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பு ஏற்பட இதில் வழக்கறிஞர் ரகுராமன் என்பவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. ரகுராமன் தூத்துக்குடி மாவட்டம் அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆவார். காயமடைந்த அவர் தற்போது தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள ஓரிரு தினங்களில் நீதிமன்ற வளாகத்திலேயே இருதரப்பு வழக்கறிஞர்கள் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS