அப்துல் கலாமுக்கு நினைவிடம்.. கட்டுமானப் பணி இன்று தொடக்கம்


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்‌கு நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் ராமேஸ்வரம் மாவட்டம் பேக்கரும்பில் இன்று தொடங்கப்பட உள்ளன.

ஏற்ற மிகு இந்தியா குறித்த எதிர்காலக் கனவை இளையதலைமுறையினர் நெஞ்சில் விதைத்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 85-வது பிறந்த நாள் இன்று. இதனை ஒட்டி பேக்கரும்பில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்காக பி.கே.சிங் தலைமையிலான பாதுகாப்புத்துறை ‌ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். பேக்கரும்பில் அப்துல்கலாம் அவர்களுக்கு நினைவிடம் அமைப்பது குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோச‌னை நடத்தியும் உள்ளனர்.

நினைவிடம் அமைப்பதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப்பணி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் டெல்லியிலிருந்து வந்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது கட்டமாக அறிவு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்கலாமின் 2-வது நினைவு தினமான அடுத்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நினைவிடத்தைத் திறந்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS