கூடங்குளத்தில் 3வது, 4வது அணு உலை கட்டுமானப் பணி நாளை தொடக்கம்


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது மற்றும்‌ 4-வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் நாளை‌ தொடங்கவுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரேசில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா நாடுகள் இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கோவாவில் நாளை நடைபெறுகிறது. அதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்கிறார். இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணுஉலை கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்தது‌. இந்நிலையில், மின் உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வாரமாக ஆயத்தப் பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து, இன்று நள்ளிரவில் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐந்தாவது மற்றும் ஆறாவது அணுஉலைகள் அமைப்பதற்கு இந்தியா, ரஷ்யா இடையேயான ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய பொது விதிகளை இருநாடுகளும் உறுதி செய்துள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS