சி.பி.ஐ அதிகாரி என கூறி ‌சார் ‌ஆட்சியரை மிரட்டியவர் கைது


சி.பி.ஐ அதிகாரி என கூறி சார் ஆட்சியரை மிரட்டிய சென்னை காவலர்‌ பழனியில் கைது செய்யப்பட்டார்.

பழனி சார் ஆட்சியர் அலுவலகத்திற்க்கு சைரன் வைக்கப்பட்ட காரில் வந்த வாலிபர் ராமர் என்பவர், தான் சி.பி.ஐ. பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாக கூறி சார் ஆட்சியர் வினித்தை சந்தித்துள்ளார்.‌ தான் 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது சென்னையில் சி.பி.ஐ. பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பழனியில் தனது உறவினருக்கு நில தகராறு உள்ளதாகவும் அதை அவருக்கு சாதகமாக முடிக்க வேண்டும் என சார் ஆட்சியர் வினித்தை, ராமர் மிரட்டியதாக தெரிகிறது. ‌

ராமர் மீது சந்தேகம் அடைந்த சார் ஆட்சியர் வினித், பழனி நகர் காவல் நிலையத்தில் ராமரை பற்றி விசாரிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ராமரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை ஆயுதப்படை போலீசாக பணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சார் ஆட்சியர் வினித்தை மிரட்டியதாக பழனி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ராமர் சிறையில் அடைக்கப்பட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS