சாத்தூரில் இளைஞர் சுட்டுக்கொலை: 9 பேர் கைது


விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. பேருந்து, சாத்தூர் படந்தால் நிறுத்தம் வந்தபோது பேருந்தில் வந்த 2 இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளைஞர் ஒருவரை சுட்டுவிட்டு ஒருவர் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

குண்டு பாய்ந்த இளைஞர் இருக்கையில் இருந்தபடியே தலைகுப்புற சரிந்த நிலையில் இறந்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இறந்தவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்ய நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS