ரத்தம் சொட்ட காட்டுக்குள் சென்றது குறும்புக்கரடி..!!


மணிமுத்தாரில் நேற்று மாமரத்தை விட்டு இறங்க மறுத்த குறும்புக்கார கரடி பல மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டிற்குள் சென்றது.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைப்பகுதியிலுள்ள மீன்பண்ணை அருகே உணவையும் தண்ணீரையும் தேடி கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் கரடியை விரட்ட வனத்துறையினரின் உதவியை நாடினர். இதனையடுத்து கரடியை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மா மரத்தில் ஏறிக்கொண்ட கரடி ஒவ்வொரு மரமாக தாவிச்சென்றது.

கரடியின் மீது தண்ணீர்பீய்ச்சியும், தீ பந்தத்தைக்காட்டியும், விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் கரடியின் முகத்தில் ரத்தம் சொட்டியது. வனத் துறையினரின் இந்த முயற்சி தோல்வியடைந்த போதிலும் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அதுவாகவே கரடி காட்டுக்குள் சென்று விட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை வனத்துறை அதிகாரிகளும் உறுதிசெய்துள்ளனர்.

வனப்பகுதியில் போதிய தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் கரடி ஊருக்குள் வருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு மணிமுத்தாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS