முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மத்திய அரசு உளவு பார்த்ததா?: பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்


முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர், மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் இதய சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சையை மேற்பார்வையிட்டனர். அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் படியும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த குற்றச்சாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அரசியல் நாகரிகமற்ற முறையில் சில தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதாக குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்திற்கு இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS