பண்ருட்டி அருகே துண்டாக வெட்டப்பட்ட ஏராளமான பண நோட்டுகள்: ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா?


பண்ருட்டி அருகே, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாய் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாக குவியல் குவியலாக கிடந்துள்ளன. இவற்றை பார்த்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர். மேலும் ரூபாய் நோட்டுகள் கிடப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அங்கு கிடந்த பணம், வீசிய காற்றினால் அங்குமிங்காக பறந்து சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பணம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணம் சேலத்திலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் சென்ற ரயிலில் ரூ.5.75 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS