நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு


நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு என்பவர், சென்னை என்எஸ்சி போஸ் சாலை, பூக்கடை பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு: ‘எங்களை பொறுத்தவரை போக்குவரத்து போலீசாரின் ஆதரவுடன்தான் இந்த வியாபாரிகள் எல்லாம் நடைபாதையில் கடை போடுகின்றனர்.

இந்த பகுதியில் பணி செய்யும் போலீஸ் அதிகாரிகள், இது போன்ற நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத தகுதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே பூக்கடை பகுதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பதில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் திறமை கொண்ட போலீஸ் அதிகாரிகளை இப்பகுதியில் நியமிக்க வேண்டும் என்று போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை வரும் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS