திருமங்கலம்-நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது


சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பேடு-ஆலந்தூர் மற்றும் விமானநிலையம்-சின்னமலை இடையே சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்கு வரத்து நடந்து வருகிறது. 2வது வழித்தடமான திருமங்கலம் முதல் சென்னை சென்ட்ரல் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சுரங்கப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. அதன் பின்னர் இந்த பாதையில் தண்டவாளம், சிக்னல்கள், அவசரகால வழி, மின்சார உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றை பொருத்தி ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் கோயம்பேடு-திருமங்கலம் பறக்கும் பாதையிலும், திருமங்கலம்-செனாய்நகர் இடையே உள்ள சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.

தற்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கப்பாதையில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மொத்தம் 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

சென்னை சென்ட்ரல் திருமங்கலம் வரையிலான ரெயில் பாதையில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, உள்பட 9 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் கோயம்பேடு மற்றும் திருமங்கலம் - எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS