முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: அப்போலோ சென்று திரும்பிய ராகுல்காந்தி பேட்டி


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் நலம் பெற வாழ்த்துவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, திட்டமிடப்படாத பயணமாக, ‌திடீரென அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து நேராக, முதலமைச்சர் சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனைக்கு ராகுல் காந்தி காரில் சென்றார்.

சுமார் 11.52 மணியளவில் அவர், மருத்துவமனைக்குள் சென்றார். ராகுல் காந்தியின் இந்தப் பயண திட்டம் திடீரென மேற்கொள்ளப்பட்டதால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு செல்ல இயலவில்லை. ஆனால் தகவலறிந்த பின்னர் அவர்கள் மருத்துவமனை அருகே குவிந்தனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ராகுல் காந்தியுடன் ‌மருத்துவமனைக்குள் சென்றார். ராகுல் மருத்துவமனைக்கு வந்ததையறித்து, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விரைவில் நலம் பெற தனது சார்பிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சார்பிலும் வாழ்த்து தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ராகுலின் சென்னை வருகை கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது. சென்னை விமான நிலையத்திலும், அப்போலோ மருத்துவமனை செல்லும் வழியிலும் அவசர அவசரமாக காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS