மதுரையில் நள்ளிரவில் திமுக பிரமுகரை கொல்ல முயற்சி: வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கம்


மதுரையில் திமுக பிரமுகர் குருசாமியை கொல்லும் நோக்கில் நள்ளிரவில் வந்ததாக கூறப்படும் ஒரு கும்பல் அந்த முயற்சி பலிக்காததால் அருகிலிருந்த வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது.

மதுரை மாநகராட்யின் திமுக பிரமுகர் குருசாமி. இவர் மீதுள்ள முன்பகை காரணமாக இவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டு ஒரு கும்பல் நள்ளிரவு இவரது வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால் தாக்க வந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக குருசாமி வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த 11 பேர் கொண்ட அந்த கும்பல் அருகிலிருந்த வீடு வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. அப்போது, அந்த வன்முறைக் கும்பலை பிடிக்க முயன்ற கீரைத்துறை காவல் ஆய்வாளர் சூரக்குமாரையும் ஆயுதங்களால் தாக்க அக்கும்பல் முயற்சித்ததாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அக்கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனினும் அக்கும்பலில் இருந்த இருவர் மட்டும் போலீசார் பிடியில் சிக்கினர். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ராஜபாண்டி இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். முன்னாள் மண்டல தலைவரான குருசாமி மீதுள்ள முன்பகை காரணமாக அவரை கொலை செய்ய ராஜபாண்டி தரப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS