இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு


இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களை கண்டித்து, காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் அதிகமான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் அங்கு வந்தன. ரோந்து கப்பல் மோதியதில் அந்தோணி க்ரூஸ் என்பவரின் படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தாக்குதலால் பல லட்சம் ரூபாய் இழப்போடு கரைத்திரும்பிய மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS