செங்கல்பட்டு அருகே ரெயிலில் பிறந்த குழந்தை.. பயணிகளே பிரசவம் பார்த்தனர்..!


செங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகளே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தை அடைந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற போது ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே பயணிகள் ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

மருத்துவ குழுவினர் அங்கு வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு ரயிலிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அதற்கு பின் வந்த மருத்துவ குழுவினர் தாய்-குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS