முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி


முதலமைச்சரின் உடல் நிலைகுறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிடும் செய்திகுறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்‌படுத்த கூடாது என கண்டித்த நீதிபதிகள், இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் செயல் முதலமைச்சரை நியமிக்கவும், முதலமைச்சரின் படங்களை வெளியிடவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதிகள் அவற்றை நிராகரித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS