முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை


காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மன வேதனை அடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்து‌மனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் பூச்சிக்கொல்லி ம‌ருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அதிமுக நிர்வாகி ஒருவர் தீக்குளித்தார். விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் கணேசன் என்பவர் முத‌லமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களால் மனமுடைந்து வருத்தப்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அவர் குணமடைய வேண்டி தீக்குளித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS