நீலகரி: கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் புலி... அச்சத்தில் மக்கள்...


நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புலி நடமாட்டத்தால் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் புலி சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் கூறி வந்த நிலையில், நேற்று புலியின் நடமாட்டம் தென்பட்டது. புதர் ஒன்றின் அருகே, புலி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் படுத்து கிடந்ததை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து புலியை வனப்பகுதிக்குள் விரட்டினர். புலி சுற்றித் திரிவதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், புலி நடமாட்டம் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புலி நடமாட்டத்தை கண்காணிக்க கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத்துறை மூலம் ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது புலி தென்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட கேமராவில் புலியின் உருவம் பதிவானது. ஆனால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதியில் புலி இல்லை என்றும் மறுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான் பொதுமக்களே புலியின் நடமாட்டத்தை நேரடியாக பார்த்துள்ளனர்.

புலியின் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகளும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாட்டவயல் மற்றும் தேவர்சோலை பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை வனத்துறை அறிந்தும், அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்காததால், புலி தாக்கி இருவர் உயிரிழந்தனர். பின்னர், இரண்டு புலிகளும் சுட்டுக் கொல்லப்பட்டன. எனவே, அலட்சியம் காட்டாமல் நெலாக்கோட்டை பகுதியில் சுற்றித்திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS