சேலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது


சேலம் மாவட்டம் மேட்டூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பழனிவேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிக்கூடதாதனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரோடு ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 2007-ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த பழனிவேலை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், மேட்டூரில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் பழனிவேல் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த கியூ பிரிவு போலீசார் பழனிவேலை சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

பின்னர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அரசுக்கு எதிராக சதி செய்தது, இயக்கத்தை வலுப்படுத்த முயன்றது என்பன உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் பழனிவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இன்று காலை மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கன்னியாதேவி முன்னிலையில் பழனிவேலை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பழனிவேலை இம்மாதம் 14-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைக்கப்பட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS