இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை


சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்து, 13 நாட்களுக்கு பிறகு, இன்று அவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18-ம் தேதி அங்குள்ள மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராம்குமார் பிரேதப் பரிசோதனையின் போது தங்கள் தரப்பில் தனியார் மருத்துவரை சேர்க்கக் கோரி அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இடம்பெறுவார்கள் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ராம்குமாரின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே.குப்தா, ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை மருத்துவக் குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் 13 நாட்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS