ஆபத்தை ஏற்படுத்துகிறதா என்.எல்.சி ‌சுரங்கம்?: ‌சக்தி வாய்ந்த வெடிகளை வைப்பதாக புகார்


என்.எல்.சி.யில் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாக, சுரங்கத்தின் அருகில் உள்ள கங்கைகொண்‌டான்புரம் பேரூராட்சி பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள ‌மத்திய அரசின் என்.எல்.சி நிலக்கரி சுரங்கம், கடந்த 1956ஆம் ஆண்‌டு தொடங்கப்பட்டது. 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியுடன் முதல் அனல் மின்நிலையம் தொடங்கிய நிலையில், பிறகு 2வது அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. என்.எல்.சி.யில் இப்போது மொத்தம் 2,990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மத்திய அரசுக்கு நிகர லாபம் ஈட்டித் தருகிறது என்.எல்.சி சுரங்கம். சமீப காலமாக என்.எல்.சி. சுரங்கத்தில் மண்ணின் கெட்டித் தன்மையை குறைப்பதற்காக அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் தங்களது பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு வீட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக கங்கைகொண்‌டான்புரம் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிக ஆழத்தில் வெடிகளை வெடிக்கச் செய்வதால் அப்பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மண் கலந்து வருவதாகவும், ‌எ‌ன்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி ‌நீர் வேகமாக மாசடைந்து வருவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, என்.எல்.சி.யில் அதிக சக்திவாய்ந்த வெடி வைப்பதையும், நிலத்தடி நீர் பாதிப்பையும் தடுக்கக் கோரி, பல கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS