சேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு


சேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி தொப்பூரில் மேட்டூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற பேருந்தும், சேலத்தில் இருந்து சென்ற மணல் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேல்சிகிச்சை தேவைப்படின் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.

விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தால் தருமபுரிக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சேலம் - தருமபுரி மாவட்டங்களின் எல்லையான தொப்பூரில் மணல் லாரியும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்திற்கு திட்டமில்லாமல் அமைக்கப்பட்ட மேம்பாலங்களும், சாலை திருப்பங்களுமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்துகள் தொடர்வதால், உரிய தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி தொப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS