மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளிவைப்பு


நாளை நடைபெறவிருந்த மவுலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் பலியானார்கள். அருகே கட்டப்பட்டு வந்த மற்றொரு 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்த போது அதுவும் பலமானதாக இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 11 மாடி கட்டிடம் வெடிமருந்து மூலம் நாளை இடிக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதற்காக, கட்டிடத்தை சுற்றிலும் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர்கள் மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 11 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி நாளை நடைபெறவில்லை என்றும் அப்பணி தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சி.எம்.டி.ஏ. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்த பிறகே அதற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS