தனியார்பள்ளியில் மதிய உணவிற்கு பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை.... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


நிர்வாகம் தரும் மதிய உணவைத்தான் மாணவர்கள் உண்ண வேண்டும் என தனியார் பள்ளி பிறப்பித்த சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக பாரதி ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கேளம்பாக்கத்தில் ஹீரா நந்தினி பவுன்டேஷன் சார்பில் இயங்கும் பள்ளியில் மதிய உணவிற்காக கட்டாயமாக பணம் செலுத்த நிர்பந்தம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்ய நாராயணன், பள்ளி நிர்வாகம் தரும் மதிய உணவை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும் என மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நிர்பந்தம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். ஆகையால், மதிய உணவிற்காக பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து, செப்டெம்பர் 29ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஹீராநந்தினி பள்ளி பவுண்டேஷன் சார்பில் இயங்கும் தனியார் பள்ளியி்ன் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பாரதி ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‛பள்ளியில் மாணவர்களிடம் மதிய உணவு வழங்குவதற்காக பெற்றோர்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது.

இதுபோல கட்டாய மதிய உணவுக்காக பள்ளி நிர்வாகம் வசூலிப்பது சட்டவிரோதமானது. எனவே அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்யநாராயணன் பிறப்பித்த உத்தரவில், மாணவர்களின் மதிய உணவு ஊட்டசத்து மிக்கதா? சத்துள்ளதா? என்பதை மட்டுமே பள்ளி நிர்வாகங்கள் பரிசோதிக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகம் தரும் மதிய உணவைத் தான் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும்; அதற்கு பெற்றோர் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்யவில்லை.

எனவே, மாணவர்களுக்கு வழங்கும் கட்டாய உணவுக்காக பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க, தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS