பொது நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் எஸ்.ஆர்.எம் பல்கலை.,க்கு இல்லை: வழக்கறிஞர் வி.டி. கோபாலன்


பொதுநல வழக்கு என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதீஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எல் ராஜா, இந்த விவகாரத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார். அப்போது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்ஆர்எம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.டி. கோபாலன், பொத்தேரியில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என வாதிட்டார். 162 ஏக்கர் நிலத்திற்கு தங்களிடம் பட்டாக்கள் இருப்பதாகவும், அங்கு ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்றும் வாதம் செய்தார். தொடர்ந்து. மனுதாரரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அரசிடம் பெற்ற நிலத்திற்கு, உரிய குத்தகைப் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர் கோபாலன் தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் மனுதாரர் நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். எட்டு ஏக்கர் நிலம் மட்டுமே, பல்கலைக்கழகத்திற்கு உரிமையானது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து, வழக்கு நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS