இரத்தம் சிந்தி திருட முயற்சி - காட்டிக் கொடுத்த சிசிடிவி 


சென்னை பள்ளிக்கரணை அருகே பூட்டி இருந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே திருட முயன்ற இருவர் வந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியில் ஒட்டியம்பாக்கம் பிரதான சாலையில் உள்ளது ஸ்ரீ கிருஷ்ணா பேன்சி ஸ்டோர். வழக்கம்போல் நேற்றிரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்ற கடையின் உரிமையாளர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ளே இருந்த கண்ணாடி கதவு அருகே ரத்தம் சிந்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது யாரேனும் திருட வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவை கண்காணித்தபோது 2 வாலிபர்கள் கடையின் உள்ளே வந்து இரும்பு சட்டரை தூக்கி உள்ளே சென்று வெளியே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது பார்த்தனர். 

உள்ளே நுழைந்த இருவர் உள்பகுதியில் இருந்த கண்ணாடி கதவை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். கண்ணாடி கதவை உடைக்கும் போது அவர்களுக்கு காயம் ஏற்பட்டு உடம்பிலிருந்து இரத்தம் சிந்தி உள்ளது அதனால் அவர்கள் திருடுவதை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருட முயன்ற 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS