நரபலி கொடுக்க இருந்த இளைஞர் தப்பியோட்டம்


முழு சந்திர கிரகணமான நேற்று  நள்ளிரவில் நரபலி கொடுக்க இருந்த இளைஞர் தப்பி ஓடி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவேடு மண்டலம் யனமந்தல கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரவீன். பிரவீன் ஒரு தனியார் நிறுவனத்தில பணிபுரிந்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராம்பிரசாத் உள்ளிட்ட 7 பேர் நேற்று காலை பிரவீனை கோயிலுக்குச் செல்லலாம் என அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி அருகே வைத்து நரபலி கொடுக்க இருந்தது தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு ஒரு மரத்தின் அடியில் பூஜை செய்வதற்காக அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் பிரவீன் அவர்களிடமிருந்து தப்பித்து நூஜிவேடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரவீன் கூறுகையில்  “நேற்று காலை 8 மணிக்கு ராம் பிரசாத் என்பவர் கோயிலுக்கு செல்லலாம் என அதே பகுதியை சேர்ந்த சாய், பாபு ராவ் ஆகியோர் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றனர். அங்கு ஒரு கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறினேன். ஆனால் இல்லை மேலும் ஒரு இடத்தில் சிறப்பு பூஜை செய்யப்படவுள்ளது அங்கு செல்லலாம் என என்னை அழைத்துச் சென்றனர். அந்த இடத்தில் மேலும் ஒரு மூன்று பேர் வந்தனர். அங்கிருந்து ஆட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். நேரம் ஆக ஆக எனக்குப் பயம் ஏற்பட்டது.

அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்த நிலையில் ஏதோ பூஜை செய்வதற்காக திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. எனவே அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்து சிறுநீர் செல்ல வேண்டும் எனக் கூறினேன். அப்போது ராம் பிரசாத் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி நான் எங்கும் செல்லக்கூடாது எனக் கூறினார். இருப்பினும் அவரிடம் இருந்த கத்தியை தட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஆட்டோவில் சுங்கூறு வந்து அங்கிருந்து நூஜிவேடு காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தேன்” என்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS