ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை


சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 7 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர்.

சென்னை அடையாறு மல்லிகை பூ நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 2 குழந்தைகளை அடையாறு பகுதியில் உள்ள பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றார். பள்ளியின் அருகில் தயாராக காத்திருந்த கும்பல், சுரேஷை அரிவாளால் வெட்டித் தள்ளி விட்டு தப்பியோடி விட்டனர்.  இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். 

இது குறித்து அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.  கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவணன், சாமுவேல், கோபி, அபினாஷ், சிவராமன், சிவகுமார், தினேஷ் ஆகிய 7 பேரும் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுார் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.  இதையடுத்து, சரவணன் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அடையாறு போலீசார் முடிவு செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. கொலைக்கான முழுமையான காரணம் தொடர்பான விசாரணை நடத்தவும் இன்னும் யாரெல்லாம் தலைமறைவாக உள்ளனர் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதற்கான மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் திங்கள் கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS